இறந்த கல்பனா யானைக்கு அஞ்சலி செலுத்திய வனத்துறையினர்
Tamilnadu

ஆசியாவின் மிகப்பெரிய பெண் யானை கல்பனா உயிரிழப்பு - வனத்துறையினர் மரியாதை!

கோவை மாவட்டம் கோழிகமுதி பகுதியில் கும்கி யானைகள் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு கலீம், கல்பனா, கபில்தேவ் உள்பட 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் அனைவருக்கும் மிகவும் பிடித்த, பரிச்சயமான யானைகளில் ஒன்று தான் இந்த கல்பனா யானை. டாப்ஸ்லிப் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சேத்துமடை காடுகளில் இந்த யானை பிடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா மரணத்தின் தாக்கத்தால், கல்பனா என்று தன்னுடைய வளர்ப்பு யானைக்கு பெயர் வைத்திருக்கிறார் பழனிசாமி என்ற பாகன்.

காலையிலும் மாலையிலும் கல்பனாவை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது முதல், குளிக்க வைத்து அந்த யானையின் கால்களுக்கு மருந்து தேய்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தார் யானைப் பாகன் பழனிசாமி. யானை மேல் உள்ள பாசத்தில், யானையின் நினைவாக கல்பனாவின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார் பாகன் பழனிசாமி.

இந்த கல்பனா என்ற 41 வயது பெண் யானை, கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தது. இந்தநிலையில் வனத்துறை மருத்துவர்கள் சுகுமார் மற்றும் மனோகர் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பெண் யானை பரிதாபமாக இறந்தது.

இறந்த யானையின் உடலைப் பார்த்து பாகன் பழனிசாமி கதறி அழுதார். பின்னர் வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பாகர்கள் யானையின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Also Read: “அன்று யானை... இப்போது சிறுவன்” - வன விலங்குகளைக் கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கடித்த சிறுவன் படுகாயம்!