Tamilnadu
இறந்தவர்கள் பெயரில் வீடு : பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் அ.தி.மு.க அரசின் துணையோடு மாபெரும் மோசடி!
தமிழகத்தில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2016-17 காலகட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் 1,76,338 வீடுகள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் 1,34,390 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே திட்டத்தின் கீழ் தற்போது 2019-20 காலகட்டங்களில் தமிழகத்தில் 2,00,000 வீடுகள் கட்ட மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை இதில், 71,617 வீடுகளை மட்டுமே கட்ட மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்தநிலையில் இதுவரை தமிழகத்தில் நடைபெறும் இந்த மோசடி ஆட்சியால், 24,643 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது அதில் நடந்ததுள்ள அதிரவைக்கும் மோசடி ஒன்று தமிழக மக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் கிராமப் பகுதியில் 240-க்கும் மேற்பட்ட கூரை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித்தர 2017-19-ஆம் ஆண்டு மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
அந்த திட்டத்தின் கீழ் வீட்டின் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் கான்கிரீட் வீடு ஒன்றிற்கு 1,70,000 ரூபாய் செலுத்தப்படும். ஆனால் விண்ணப்பதாரர்கள் பலரது வங்கிக் கணக்கிற்கு இன்னும் அந்தப் பணம் வராத நிலையில் வீடு கட்டி முடிக்கப்பட்டதாக இவர்களது பெயரில் வேறு ஒருவர் புகைப்படத்தை ஒட்டி அவர்களுக்கே இந்த மோசடி அரசால் கடிதம் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்த கிராம மக்கள் உடனடியாக தலையாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த மோசடியிலும் உச்சகட்டமான மோசடி என்னவென்றால் தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தனுக்கு வீடு கட்டி முடித்துவிட்டதாக ஒரு கடிதம் வந்துள்ளது. ஆனால் கோவிந்தன் 2016-ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டார். இதேபோல, ஜெயச்சந்திரன், சிவபாக்கியம் என இறந்தவர்கள் பலரது பெயரில் வீடு கட்டி முடித்துவிட்டதாகக் கூறி, இதுவரை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த கிராமத்தைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி, கர்ணாவூர், தேவேந்திரபுரம் என மாவட்டம் முழுவதும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், மாவட்ட கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி திட்டத்தின் இயக்குனருமான கமல் கிஷோர் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போதுதான் கிசான் திட்டத்தில் பல கோடிகளில் மோசடி வெளிவந்த நிலையில் தற்போது அடுத்ததாக இந்த பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திலும் நடந்துள்ளது. எனவே தமிழகத்தில் நடக்கும் இந்த மோசடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வந்துவிட்டது எனப் பொதுமக்கள் கருதுகின்றனர்.
Also Read
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு:அமைச்சர் சக்கரபாணி - முழுவிவரம் உள்ளே!
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை மோடியும், ஆர்.என்.ரவியும் படிக்க வேண்டும் ; முதலமைச்சர் அட்வைஸ்!
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!