Tamilnadu

கோவையில் வியாபாரிகள் இருவரிடையே முன்விரோதத்தால் மோதல் - பழிக்குப் பழியாக ஒருவர் குத்திக் கொலை!

கோவை காந்திபுரம் பகுதியில் பிஜூ என்பவர் சோடா கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ஆறுமுகம். ஆறுமுகம் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

இவருக்கும், இந்து முன்னணி ஆதரவாளரான பிஜூவிற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆறுமுகத்தின் மகன் நிதிஷ்குமாரை ஒரு பிரச்சினை தொடர்பாக ஆனந்த் என்பவர் தனது அடியாட்களுடன் சென்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பலமாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, சாயிபாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே, இந்த பிரச்சினைக்கு பிஜூ தான் காரணம் என்று ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள், காந்திபுரம் பகுதியில், பிஜூவை பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த பிஜூவை அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குச் சிகிச்சை பலனின்றி பிஜூ உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும், இந்து முன்னணியினர் அங்கு கூடியதால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கொலை நடந்த இடத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் தப்பியோடும் காட்சி பதிவாகியுள்ளது. இதை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக, ராம் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா, கார்த்திக், அருண், அரவிந்த், பிரபு, பிரவீன் ஆகிய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

எல்லா கொலைச் சம்பவங்களிலும் மத மோதலை உருவாக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துமுன்னணி போன்ற மதவாத அமைப்புகள், இந்தச் சம்பவத்திலும் மத மோதலை உருவாக்க முனைய வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வளர்கள் எச்சரித்துள்ளனர்.