Tamilnadu
“விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் புகழ் என்றும் நிலைத்தோங்கிட வேண்டும்” : மு.க.ஸ்டாலின் !
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் திரு. இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இந்திய விடுதலைப் போராட்ட வீரர் திரு. இமானுவேல் சேகரனார் நினைவு நாளை (11.9.2020) முன்னிட்டுப் புகழஞ்சலி செலுத்தினேன்.
“வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு- தனது 18-வது வயதில் கைதாகி- தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய இளைஞர் அவர். தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கல்வி - அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய அவருக்கு, 2010-ல் கழகம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த நேரத்திலும்- மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பங்கேற்றிருந்த காலகட்டத்திலும்தான் தபால் தலை வெளியிடப்பட்டது.
சமூகநீதிக் களத்திலும், நாட்டின் விடுதலைக் களத்திலும் நாடிச் சென்று பெரும்பங்காற்றிய அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் - அந்த உரிமை தாகத்துடன் இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாளாகவே அமைந்துள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள ஆறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, “தேவேந்திரகுல வேளாளர்” என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்று இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம்.
“இந்த கோரிக்கையை உரிய முறையில் பரிசீலனை செய்து, அதற்குத் தக்கதொரு தீர்வினை விரைவில் கண்டிட வேண்டும் என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் - மத்திய அரசையும் தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தும்” என்ற உறுதியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசும், அ.தி.மு.க. அரசும் இதுவரை அமைதி காக்கிறது. ஆகவே இக்கோரிக்கையை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகிறேன். திரு. இமானுவேல் சேகரனாரின் புகழ் என்றும் நிலைத்தோங்கி நீடுழி வாழ்க!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!