Tamilnadu

“அரசு அதிகாரிகள் துணையுடன் ரூ.110 கோடி அளவில் கிசான் திட்டத்தில் முறைகேடு” - வேளாண் துறை செயலாளர் பேட்டி!

விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் கிளம்பியது. இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகளுக்கும், அ.தி.மு.க-வினருக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், அரசு அதிகாரிகள் துணையுடன் கிசான் திட்டத்தில் மோசடி நடந்துள்ளதாக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்ததாவது :

“கொரோனா வைரஸ் காலகட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கிசான் திட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும். மார்ச் மாதம் வரை கிசான் திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை.

ஆகஸ்ட் மாதத்தில் திடீரென 6 லட்சம் பயனாளர்கள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திடீரென பயனாளர்களின் எண்ணிக்கை குறிப்பாக 13 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

அரசு அதிகாரிகள் துணையுடன் கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் சில இடைதரகர்கள் இணைந்து போலி விவரங்கள் கொடுத்து 13 மாவட்டங்களில் மோசடி நடந்துள்ளது.

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வருகிறது. 13 மாவட்டங்களில் கம்ப்யூட்டர் சென்டர்களில் விசாரிக்க குழு அமைத்து உள்ளோம்.

கிசான் முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 80 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிசான் திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.

பிரதமர் கிசான் மோசடி மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 110 கோடி மோசடி நடைபெற்றிருக்கலாம். இதுவரை 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மோடி அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு” : ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா? - போலிஸ் விசாரணை!