Tamilnadu

கோவை மாநகராட்சியில் தரகர்கள் ஆதிக்கத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? - எஸ்.பி வேலுமணிக்கு DMK MLA கேள்வி!

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்தில் நடைபெறும் விதிமுறை மீறல் மற்றும் முறைகேடுகளை தடுக்காமல் , கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ கேள்வி எழுப்பியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“கோவை மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டிட வரைவு அனுமதி வழங்குவதற்கு ஏற்படும் தாமதத்தால் , விண்ணப்பதாரர்கள் நீண்ட காலம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டிட வரைவாளர்கள் மற்றும் இளம் பொறியாளர்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்டவர்களுக்கு உரிமம் புதுப்பித்து தரப்பட்டுள்ளது. ஆனால் கோவை மாநகராட்சியில் மட்டும் இந்த உரிமம் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. புதிதாகவும் யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் , கோவையில் சில புரோக்கர்கள் , கோவை மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் , அதிகாரம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இவர்களது கண் அசைவில்தான் கட்டிட வரைவு விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான வீடுகள், மனையிடங்கள், பெரிய வீடுகள் , அடுக்கு மாடிகள், மனை பிரிவுகள் ஆகியவற்றிற்கான கட்டிட வரைவு விண்ணப்பங்களுக்கு அனுமதி இந்த புரோக்கர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

தினமும் 40 முதல் 50 விண்ணப்பங்கள் இந்த புரோக்கர்கள் மூலமாக மாநகராட்சி நகரமைப்பு பிரிவு, மண்டல அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் திட்ட குழுமங்களில் ஒப்புதல் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. ஏரியா மற்றும் கட்டிடங்களுக்கு ஏற்ப சுமார் பல லட்ச ரூபாய் வரை கமிஷன் பெறப்படுகிறது.

இந்த புரோக்கர்கள் மீது மாநகராட்சி உள்ளூர் திட்ட குழுமம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.‌ கோவை மாநகராட்சியின் கட்டிட வரைவாளர்கள் பலமுறை புகார் கொடுத்தும், புரோக்கர் ஆதிக்கம் மற்றும் முறைகேடு தடுக்கப்படவில்லை.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த விதிமுறை மீறல் மற்றும் முறைகேடுகளை தடுக்காமல் , கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வருவாரா?.

Also Read: உயர்கல்வி படித்த 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கல்வித்துறை கருணையற்றத் துறையாகிறது - திமுக MLA சாடல்!

இந்த புரோக்கர்களால், இந்த அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் நேர்மையாக பணியாற்ற முடியாத நிலைமை இருக்கிறது. கட்டிட வரைவு விண்ணப்பங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டுவதற்கான ஒப்புதல் விண்ணப்பங்கள் நிலை என்ன என உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்துவதில்லை.

கோவை மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்தில் ஆன்லைன் நடைமுறை முற்றிலும் செயலிழந்து போய் விட்டது. புரோக்கர், கமிஷன் , முறைகேடு என்ற நிலைமை உருவாகிவிட்டது.

சாதாரண நிலையில் இருந்தவர்கள், புரோக்கர்களாக மாறி முறைகேடுகள் செய்து பெரிய கோடீஸ்வரர்களாக உருவாகி விட்டார்கள். அரசியல் பின்புலத்தில் தவறு செய்யும் புரோக்கர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தால் மக்களிடையே நம்பிக்கை பிறக்கும். இல்லாவிட்டால் ஊழல் முறைகேடுகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட நேரிடும்.

ஆகவே ,கோவை மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்தில் புரோக்கர்கள் மூலம் நடைபெறும் விதிமுறை மீறல் மற்றும் முறைகேடுகள் அனைத்தையும் தடுக்க, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Also Read: “நடக்காத பணிகளுக்கு சாதனை விழாவா?” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி!