Tamilnadu

“நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்”- திராவிடர் கழகம் அறப்போராட்டம்!

ஒடுக்கப்பட்ட மக்களை தலையெடுக்காமல் செய்யும், அவர்களின் உயிரைக் குடிக்கும் ‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்றும், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பிறப்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி நாளை (27.8.2020) வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அவரவர் வீடுகளின்முன்பு கழகத் தோழர்கள் கொரோனா ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி அறப்போரை நடத்த வேண்டும் என்றும், ஒத்தக் கருத்துள்ளவர்களும் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு :

மத்திய - மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், விதிக்கப்பட்ட விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டு, ஆசிரியர்கள் - பாட போதிப்பு உரிய முறையில் நடைபெறுகிறதா என்பதை மட்டும் கண்காணிக்கவும், அதன்படி உள்ளவைகளை அங்கீகரிக்கவுமான ஓர் அமைப்புதான் மருத்துவக் கவுன்சில் (Medical Council) என்ற அமைப்பு ஆகும்.

மருத்துவர்கள் - சமூக ஆர்வலர்கள் - நிபுணர்கள் எதிர்த்தனர்!

இதுகூட மத்திய பா.ஜ.க. அரசு, சட்டத்தில் திருத்தப்பட்டது. அரசின் ஆதிக்கம் அதிகம் உட்படுத்தப்பட்ட முறையில் தேசிய மருத்துவக் கவுன்சில் சட்டம் நிறை வேற்றப்பட்டது; அப்போதே இதற்கு மருத்துவர்களிடமிருந்தும், சமூக ஆர்வலர்கள் - சட்ட நிபுணர்களிடமிருந்தும் எதிர்ப்பு இருந்தது.

அந்த மருத்துவக் கவுன்சிலின்கீழ் நுழைவுத் தேர்வுக்கென தனி அமைப்பாக ஒன்றை அமைத்து, மருத்துவக் கல்வி பயில இளநிலை, முதுநிலை - ஆகியவற்றில் சேர விரும்புவோர் அகில இந்தியா முழுவதற்கும் அவ்வமைப்பு நடத்தும் ஒரு தேர்வை எழுதி, அதில் வெற்றி பெறுகிறவர்கள் மட்டும்தான் எம்.பி.பி.எஸ்.சிலோ, மேற்பட்டப் படிப்பு, எம்.எஸ்., எம்.டி., போன்றவைகளிலோ சேர முடியும் என்பதாக ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது.

இது முந்தைய ஆட்சியின்போது நடந்தது என்றாலும், அதற்கு முக்கிய காரணம் - உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கொடுத்த தீர்ப்பினைச் செயல்படுத்தும் வகையிலான சட்டம் என்று கூறப்பட்டது.

அப்படி உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு என்பதே கூட எந்த அளவுக்கு சட்ட நடைமுறை - நியாயப்படி சரியான தீர்ப்பாகும் என்ற கேள்விக்கு இன்றுவரை தக்க பதில் இல்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக நன்கொடை (Capitation Fees) வாங்குகிறார்கள்; இதுபோன்ற ஒரு நுழைவுத் தேர்வு அதற்கு தக்க பரிகாரமாக அமையும் என்று கருதி, உச்சநீதிமன்றத்தில் ஒருவர் போட்ட வழக்கில், அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் அல்தாமஸ் கபீர் என்பவர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்புக் கூறியது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீரும், நீதிபதி விக்கிரமஜித் சிங்கும் (இரண்டு நீதிபதிகள்) நுழைவுத் தேர்வு தேவையில்லை என்றே - பெரும்பான்மை - தீர்ப்பளித்தார்கள். ஜஸ்டீஸ் அனில் தவே என்ற குஜராத்தைச் சார்ந்தவர் மாறுபட்ட கருத்து எழுதினார். அதாவது, நுழைவுத் தேர்வு தேவை என்பதாகத் தீர்ப்பளித்தார்.

பின்னர் மோடி தலைமையில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது.

அந்தத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்ற பிறகு, இத்தீர்ப்புக்கு மறுசீராய்வு (Review) போல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டது. மரபுகளுக்கு மாறாக, சென்ற வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த ஜஸ்டீஸ் அனில் தவே தலைமையில் ஓர் அமர்வு அமைக்கப்பட்டு, அது நுழைவுத் தேர்வைக் கட்டாயம் என்பதாகத் தீர்ப்பு - மறுசீராய்வில் தந்தது!

கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. எனவே, மாநிலங்களுக்கு இதனைப் பின்பற்றவோ, மறுக்கவோ அவற்றிற்கு அதிகாரம் அரசமைப்புச் சட்டப்படி உள்ளது. ஆனால், அவ்வுரிமையைப் புறந்தள்ளி இந்தத் தீர்ப்பும் அதையொட்டி மத்திய அரசின் திணிப்பும் அமைந்தன.

ஒரு வணிக ஒப்பந்தத்தின்கீழ் வரும் வகையில்...

பிரதமர் மோடி அரசு, இதனை ஒரு தேர்வுக் குழுவை அமைத்து - உலக நாடுகளில் உள்ளவர்களும்கூட இந்தத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று இதனை ஒரு வணிக ஒப்பந்தத்தின்கீழ் வரும் வகையில் இடமளித்து அமைத்துள்ளனர். ‘நீட்’ தேர்வு எழுதி இடம்பெறத் தகுதி உடையோர் யார் யார் என்பதை அவர்கள் வெளியிட்ட அறிவிப்பே கூறியது.

(இத்திட்டத்திற்குப் பின்னணி பிதாமகர் ஊழலுக்காக சி.பி.ஐ.யினால் கைது செய்யப்பட்ட கேதன் தேசாய்)

‘நீட்’ தேர்வினையும், மற்ற தேர்வுகளையும் நடத்தும் சட்டப்படியான அதிகாரம் பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உரியது என்பது இந்திய அரசமைப்புச் சட்டப்படியான நிலைப்பாடு என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் சுட்டிக்காட்டி, இது ஓர் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கை (‘நீட்’ தேர்வு) என்று எடுத்துச் சொன்னாலும், பிடிவாதமாக உச்சநீதிமன்றமே இதனை விடாப்பிடியாக வற்புறுத்தி வருகிறது!

விதிவிலக்கு இதற்குத் தர முடியும் மத்திய அரசால்; அப்படியொன்றும் விதிவிலக்கே தர இயலாத இரும்புச் சட்டம் அல்ல என்பதற்குக் கைமேல் உதாரணம், தமிழ்நாடே! ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2016-2017 இல் விதிவிலக்குக் கோரினார் - அவர்களும் ஓராண்டு விதி விலக்குத் தந்துள்ளனர்.

பிறகு, தமிழக சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசு அதனை பல மாதம் கிடப்பில் வைத்து, காரணம் எதுவுமே சொல்லாமல் - குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது; இத்தகவலைக்கூட அ.தி.மு.க. அரசு மக்களிடம் உடனடியாக சொல்லாது, கமுக்கமாக வைத்திருந்தது. உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞர்மூலம்தான் இந்த அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி வெளியானது!

துணிவுடன் இதனை வற்புறுத்தாதது தமிழக அரசின் மிகப்பெரிய குறைபாடு. இரட்டைக் குரலில் பேசும் நடைமுறையே அதன் பலவீனம்.

‘நீட்’ தேர்வுக்கு இதுவரை செல்வி அனிதா தொடங்கி, 12 மாணவிகள் உயிர்ப்பலி ஆகி (தற்கொலை) செய்துகொண்ட வரலாறு எளிதில் மறையுமா?

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் தொகை இவ்வாண்டு 13 சதவிகிதம் குறைந்துள்ளது.

முந்தைய ஆண்டு, ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் எண்ணிக்கை; இவ்வாண்டு, ஒரு லட்சத்து 17 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

மாறாக, பீகாரில் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் கூடியிருக்கிறது.

உ.பி.யில் 16 சதவிகிதம் கூடுதல்.

இதிலிருந்து ‘நீட்’ தேர்வு யாருக்கு என்பது புரிகிறதா?

அனைவருக்கும் ஒரே கேள்வித்தாள்தானா?

இல்லையே, அந்தப் புகாருக்கும் தெளிவான பதில் இல்லை. (ஆனால், குஜராத் மாநிலத்திற்கு மட்டும் எளிமையான கேள்வித்தாள்).

இப்போது கொரோனா தொற்று கடுமையாகப் பரவி வருகிறது; 5 மாத ஊரடங்கு, பொருளாதார முடக்கம் நடைபெற்றும் - உயிர்ப்பலி எண்ணிக்கைகள் குறைந்த பாடில்லை என்ற சோகம் நாளும் மக்களை வெகுவாக அச்சுறுத்துகிறது.

சட்டமன்றத்தைக் கூட்டி, ஓர் உறுதியான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றுக!

எனவே, இவ்வாண்டு மற்ற தேர்வுகளை நடத்தாமல் தள்ளி வைத்ததுபோல, மேற்படிப்புக்கான ‘நீட்’ தேர்வையும் கைவிட தொடர்ந்து பல மாநில முதல்வர்களும் கோருகிறார்கள்; மேற்குவங்கம், ஒரிசா, டெல்லி முதலியன இதில் அடங்கும். தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி, ஓர் உறுதியான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றி, இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நடத்திக் கொள்கிறோம் என்று சட்டப்படித் தீர்மானம் - அவசரச் சட்டமாக நிறைவேற்ற அதிகாரம் உண்டு. அதன்படி நடத்திடவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதை ஏற்று, உடனடியாக - காலதாமதமின்றி செயல்படுத்தி, தமிழ்நாட்டு பெற்றோர், மாணவ, மாணவிகளை கவலையிலிருந்து வெளிவரச் செய்தல் தமிழக அரசின் தலையாயக் கடமையாகும்.

தேர்வா? மாணவர்களின் உயிரா? என்றால், உயிர்தான் முக்கியம் என்பது எல்லோரும் ஒருமனதாகக் கூறும் பதில்!

அவரவர் வீட்டின்முன்பு நின்று அறவழி ஆர்ப்பாட்டம்!

இதனை வற்புறுத்தி, மத்திய - மாநில அரசுகளை செயல்பட வைக்க, நாளை (27.8.2020) காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்க! அவசர சட்டம் இயற்றுக! மாணவர்களின் உயிரைப் பறிக்கும் கொரோனா தொற்றைவிடக் கொடியது ‘நீட்’ தேர்வு பிடிவாதம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு, அவரவர் வீட்டின் முன்பு, முகக்கவசம் - தனிநபர் இடைவெளி இவற்றைக் கடைப் பிடித்து, அறவழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும்.

ஒத்த கருத்துள்ளவர்கள் பங்கேற்கலாம்!

திராவிடர் கழகம் நடத்தினாலும், ஒத்த கருத்துள்ளவர்கள், பெற்றோர், மாணவர்கள், மருத்துவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்!

நான் எனது இல்லத்தின் முன்பு கழகப் பொறுப்பாளர்கள் சிலருடன் இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு கடமையாற்றிட முனைவுடன் உள்ளேன். அனைவரும் போராடுவோம் - அரசுகளின் மூடிய கண்களைத் திறக்க வைப்போம், வாரீர்! வாரீர்!!”

இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Also Read: “மாணவர்கள் மீதான அக்கறை உண்மையானால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லவேண்டும்”- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!