Tamilnadu

“கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் புகார் அளிக்கலாம்” : கட்டண நிர்ணயக் குழு!

தமிழகம் முழுவதும் நர்சரி, மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் என 10,558 தனியார் பள்ளிக்கள் உள்ளது. இந்த தனியார் பள்ளிகளில் அதிகளவில் வசூலிக்கப்பட்டும் கட்டணத்தை தடுக்க சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், வசூலிக்கப்படும் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டண நிர்ணய குழுவால் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 2019 - 2020ம் கல்வியாண்டுடன் 5400 பள்ளிகளுக்கு சுயநிதி கல்வி கட்டணக்குழு நிர்ணயம் செய்த கட்டண முறை முடிவடைந்துள்ளது.

இதனிடையே கட்டணம் நிர்ணயம் செய்யாத பள்ளிகள், முழுமையான அங்கீகாரம் பெறாத பள்ளிக்கள் என சுமார் 8,200 பள்ளிகள் இன்னும் கட்டணம் நிர்ணயம் செய்யாமல் இருக்கிறது. எனவே அந்த பள்ளிகள், 2020 - 2023 வரையிலான ஆண்டுகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் பள்ளிகள்வரும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் கட்டணங்களை நிர்ணயிக்க தங்களுடைய வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு முன்னர் பழைய கட்டணத்தையே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.

புதிய கட்டணம் நிர்ணயித்த பின்னர் அதன் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வசூலித்துக்கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை எத்தனை தவணைகளில் வசூல் செய்வது என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.

மேலும், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் நேரடியாக குழுவிடம் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது விசாரணை செய்யப்பட்டு பள்ளியில் தவறு செய்து இருந்தால் கட்டணம் திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை: உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!