Tamilnadu

பரிசோதகராக வேடமிட்டு பயணிகளிடம் அபராதம்: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி டி.டி.ஆர் கைது!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ரயில்வே துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக தன்னை ரயில்வே முதுநிலை டிக்கெட் பரிசோதகராக அறிமுகப்படுத்திக்கொண்ட சேலம் மாவட்டம் கெங்கவள்ளி பகுதியை சேர்ந்த அல்ஜியானி(32) கடந்த ஆறு மாதமாக கார்த்திக்கை சென்னை பெரியமேடு வரவழைத்து சிறுக சிறுக ரூபாய் 8 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.

அதன் பிறகு கார்த்திக் போன் செய்யும் போதெல்லாம் அல்ஜியானி போனை எடுக்காமல் தவித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கார்த்திக் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த பெரியமேடு போலீசார் அவரை பிடிக்க காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்தபோது அல்ஜியானி திருவள்ளூர் அருகே ஒரு வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலிஸார் நேற்று அவரை கைது செய்து பெரியமேடு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கார்த்திக்குக்கு தெரிந்த பெண்ணொருவர் ஒருவரின் மூலமாக அல்ஜியானி நட்பு கிடைத்துள்ளது. தான் ஒரு ரயில்வே முதுநிலை டிக்கெட் பரிசோதகர் என்றும் தன்னால் ஈசியாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் டிக்கட் பரிசோதகர் வேலை வாங்கித் தர இயலும் என்று கார்த்திக்கை நம்பவைத்து சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் லாட்ஜ் வரவழைத்து அவரிடம் 8 லட்சம் வரை பணம் பறித்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அல்ஜியானி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகராக வேடமிட்டு பயணிகளிடம் அபராதம் விதித்து லட்ச கணக்கில் பணம் வசூலிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்மீது சேலம் ரயில்வே காவல் நிலையத்திலும், ஓசூர் ரயில்வே காவல் நிலையத்திலும் திருட்டு மற்றும் மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரூ.6.30 லட்சம் பணம், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.