Tamilnadu

உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பனை செய்த பட்டாதாரி பெண்; கையும் களவுமாக சென்னையில் கைது!

சென்னை கிண்டி பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஆன்லைன் ஆர்டரின் பேரில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா சப்ளை செய்வதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி ஆணையர் சுப்பராயன், காவல் ஆய்வாளர் சந்துரு ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலிசார் கிண்டி வேளச்சேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் வேகமாக சோதனைச் சாவடியை கடந்து சென்றதை கண்ட போலீசார், அவரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 32 வயதான வனிதா என்றும், கார் ஓட்டுநராகவும் ஆன்லைன் ஆர்டர்களின் பேரில் வீடுகளுக்குச் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வனிதாவின் மீது போலிசாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. உடனே அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்து பார்த்ததில், அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலிசாரே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

உடனே அவரை கைது செய்த போலிசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கோயம்பேட்டில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தன்னிடம் வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே சென்று சப்ளை செய்து வருவதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் வனிதா.

இந்த பெண் பிசிஏ பட்டப்படிப்பு படித்துவிட்டு பகுதிநேரமாக இந்த குற்றச்செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், 500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலிசார், வனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: குற்றங்களை கண்காணிக்க பொருத்திய சிசிடிவி கேமிராக்களை திருடிய பலே திருடன்: சென்னையில் நூதனம்!