Tamilnadu
தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு... மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் உள் தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக கோவை பெரியநாயக்கன்பாளையம், திருவாரூர் வலங்கைமான், நன்னிலம் தலா 6 செ.மீ மழையும், அதற்கடுத்தபடியாக திருவாரூர் குடவாசல், திருவாரூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் திருப்பூண்டி தலா 5 செ.மீ மழையும், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கொள்ளிடம், தஞ்சாவூர் பாபநாசம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் தலா 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தெற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அடுத்த நான்கு நாட்களுக்கு கடலோர கேரளா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் அலை முன்னறிவிப்பு
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி பகுதி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடலலை 2.2 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!