Tamilnadu

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் தடுக்க என்ன வழி? - அரசுகளுக்கு ஐகோர்ட் ஆணை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இதற்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் இருப்பதே காரணமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதித்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிக்காமல் இருக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மருந்துகளை வழங்கவேண்டும் எனவும், 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யவும் உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் பணியில் மக்கள் என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் மனோதிடத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும் வகையில் தகுந்த மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும், குணமடைந்தவர்கள் மீண்டும் தங்களை பரிசோதித்துக்கொள்ள பிரத்யேகமாக மருத்துவமனையை அறிவித்து, தொடர் சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதல்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில், இதுவரையில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அரசு மருத்துவமனையில் முறையான உணவு, தண்ணீர் வழங்குவதில்லை” : கொரோனா நோயாளிகள் புகார்!