Tamilnadu

“உடனடியாக +2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிடுக” - தங்கம் தென்னரசு வேண்டுகோள்!

"பள்ளிக்கல்வித்துறை உடனடியாக +2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிட வேண்டும்" என விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த ஜூலை 16-ஆம் தேதியன்று வெளியிட்டு இன்றோடு ஒருவாரகாலம் ஆகிவிட்டது.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான அன்றே மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான அறிவிப்புகளையும், தேர்வுகள் இயக்ககம் உடனே வெளியிடுவதுதான் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள நடைமுறையாகும்.

அப்போதுதான் மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், தாங்கள் ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுள்ள மதிப்பெண்கள் சார்ந்து தாங்கள் செய்ய விரும்பும் முறையீடுகளை விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கோ அல்லது மறுகூட்டலுக்கோ தெரிவிக்க இயலும்.

தாங்கள் விரும்பும் உயர்கல்விக்கான மேற்படிப்புகளுக்கு உரிய கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, மறுமதிப்பீடு / மறுகூட்டல் வாயிலாக அவர்கள் பெறக்கூடிய கூடுதல் மதிப்பெண்கள்தான் கல்லூரியில் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெறுவதற்குப் பெரிதும் தேவையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

ஆனால், மிக முக்கியமான, மாணவர்களுக்கு உடனடித் தேவையான இந்த அறிவிப்பினைத் தேர்வு முடிவுகள் வெளிவந்து ஒருவார காலம் ஆகியும் இன்னும் வெளியிடாமல் “வழக்கம் போல” குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய நிலைப்பாடு, மிகுந்த வேதனை அளிப்பதுடன், தேர்வில் வெற்றி பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

பல கல்லூரிகள், மாணவர்களுக்கான சேர்க்கையினை அறிவித்து அவை தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள சூழலில், தங்கள் உயர்கல்வி வாய்ப்புகள் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மறுமதிப்பீடு / மறுகூட்டலினை எதிர்நோக்கும் மாணவர்களும், அவர்களின் எதிகாலம் குறித்துக் கவலையில் ஆழ்ந்துள்ள பெற்றோர்களும் எழுப்பும் வேதனைக்குரல் காதில் விழுந்தும் விழாதது போலவே பள்ளிக்கல்வித்துறை நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ஏற்கனவே மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) வழியில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும், இந்த ஆண்டு தமிழக மாநிலப் பாடத்திட்ட வழியில் பயின்று பொதுத்தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாட வாரியாகப் பெற்றுள்ள மதிப்பெண்கள் குறைவென்பதும், அதன் வாயிலாகப் பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்கான சேர்க்கையில் இந்தாண்டு அரசுப்பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர இயலாத ஒரு நிலையை தமிழகப் பள்ளிக்கல்வித்துறையே ஏற்படுத்தி விட்டது என்பதும் பெரும் குற்றச்சாட்டாகப் பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், நம்முடைய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வண்ணம், பள்ளிக்கல்வித்துறை உடனடியாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

நோய்த்தொற்றின் காரணமாக, மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகல்களைப் பெற்றுச் செல்வதில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அரசின் வழிகாட்டல் நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் அவற்றை உரிய வகையில் பாதுகாப்பாகப் பெற்றுச் செல்வதற்கான ஏற்பாடுகளை தேர்வுகள் இயக்ககம் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு மேலும் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், மாணவர்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பதை உணர்ந்து, மெத்தனப் போக்கினைக் கைவிட்டு, பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொண்டு நம் மாணவர்களின் நலனைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : கோவை மாநகராட்சியைக் கண்டித்து காலி குடங்களோடு கண்டன ஆர்ப்பாட்டம்!