கோப்புப்படம்
Tamilnadu

“பள்ளிகளில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் 40% கல்விக்கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்” - சென்னை ஐகோர்ட் ஆணை!

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரருக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பள்ளிகள் தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ், இந்த ஆண்டு ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பாட புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என மாணவர்களின் நலன் கருதி கேட்கிறோம்.

அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம், அதேசமயம் கல்வி நிறுவனங்களின் நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும். கல்வி நிறுவன கட்டிடங்களின் சொத்துவரி தொடர்பாக அரசிடம் கொடுத்த மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கல்வி நிறுவனங்கள்தான் அதிகமாக வழக்குகள் தொடர்ந்துள்ளன. பல மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக அரசுக்கு மனுக்களை அனுப்பி உள்ளனர். எனவே கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் தரப்பு கருத்தையும் அரசு கவனத்தில் வைக்க வேண்டியுள்ளது. அரசு உதவி பெறாத பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் 75 சதவிகிதத்தை மூன்று தவணைகளில் வசூலிக்க அனுமதிக்கலாம் என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தற்போது 25%, பள்ளிகள் திறக்கும்போது 25%, அதற்கு அடுத்த மூன்றுமாதங்கள் கழித்து 25% என வசூலிக்க அனுமதிக்க உள்ளோம். இந்த கல்வியாண்டு கட்டணம் எவ்வளவு என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணய குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் கொரோனா தொடர்கிறது. இதன் தாக்கம் எப்போது குறையும் எனத் தெரியாத நிலை உள்ளது. எனவே அரசு அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும்.

Also Read: கொரோனா பீதி : பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அவசியம் ஏன்? - இளம் மருத்துவரின் விளக்கம்!

அரசு கல்வி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கினால்தான், அரசு உதவி பெறாதவை செயல்பட முடியும் என கல்வி நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்படுகிறது. அதேநேரத்தில் கட்டணம் செலுத்தக்கூடிய நிலைமையில் இல்லை என்று பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75 % கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

இரண்டாம் தவணை 25%-ஐ பள்ளிகள் திறக்கும்போது வசூலிக்கலாம் எனச் சொல்லும் நிலையில் எப்போது திறக்கும் என தெரியாத நிலை உள்ளது. அதனால் 2020-21 முதல் தவணையை 40%ஐ ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம். இந்த உத்தரவு அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை பொருந்தும்.

கட்டண நிர்ணய குழு கட்டண நிர்ணய நடைமுறையை துவங்கி ஆகஸ்டில் இருந்து 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த ஆண்டு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது. பாடப் புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 5ம் தேதி ஒத்திவைத்தார்.

Also Read: ''டிஸ்சார்ஜ் ஆன முதல் நாளே பொதுவெளிக்கு வந்த கொரோனா பாதித்த அமைச்சர்'' : அதிகாரிகள்; நிருபர்கள் பீதி!