தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்துக்கு சாமானிய மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள், தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகிய நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குணமானதை அடுத்து நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த அமைச்சர், அன்றைய மாலையே செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றுள்ளார். அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உயர்கல்வித்துறை இயக்குநர், செயலாளர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வீடு திரும்பினாலும் குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்தது பெரும் சர்ச்சையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள், அதிகாரிகளின் அறிவுரைகளை அமைச்சர்களே கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது பெரும் தவறான முன்னுதாரணமாகவே கருதப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.