Tamilnadu

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - மாணவியர் மாணவர்களை விட 5.39% அதிகம் தேர்ச்சி!

தமிழகத்தில் மார்ச் 2020ல் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 2-ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு வரும் 27-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது இன்று, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், மார்ச் 2020 நடைபெற்ற மேல்நிலை 2ம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இணையதளத்திலும் குறுஞ்செய்தியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:

இதில், மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.3 சதவிகித பேர். அதில் மாணவர்கள் 89.41 சதவிகித பேரும், மாணவிகள் 94.80சதவிகித பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவியர் மாணவர்களை விட 5.39% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பள்ளிகளில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் இந்தாண்டு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 85.94% தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சியும், மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

அதேப்போல் தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2835ல் 2506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62 பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஜூலை 13 முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு” - மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது ஏன்?