Tamilnadu

“ஊரடங்கில் வேலை இல்லாததால் ஏற்பட்ட தகராறு” - மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை!

காஞ்சிபுரம் மாவட்டம் எண்ணைக்காரன் தெருவை சேர்ந்தவர் 45 வயதான தேவி பிரசாத். இவர் கார் ஓட்டுநராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 37 வயதான சரஸ்வதி. இவர் அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.

இருவரும் அன்றாட வேலை செய்து அதில் வரும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, சவாரி எதுவும் இல்லாத காரணத்தினால் தேவி பிரசாத் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்.

சரஸ்வதி வேலை பார்த்து வந்த வீட்டினரும் கொரோனா அச்சத்தால் சரஸ்வதியை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளனர். இருவருக்கும் வேலை இல்லாத சூழலில் போதிய வருமானம் இல்லாமல் அன்றாட உணவுக்கே மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும், வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைகளுக்கு கூட பணம் இல்லாத காரணத்தினால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவும் மீண்டும் கணவன் மனைவி இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த தேவிபிரசாத் மனைவி சரஸ்வதியை கயிற்றில் கட்டிப்போட்டு சுத்தியலால் அடித்து கொலை செய்திருக்கிறார். அதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

கோபத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு குற்ற உணர்ச்சியிலும் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்திலும் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் தேவி பிரசாத். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் சரஸ்வதியின் வீட்டு கதவு திறக்காததாலும் இருவரும் வெளியில் வராததாலும் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய போலிஸார், கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். தேவி பிரசாத்தும் அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்.

இருவரின் உடல்களை கைப்பற்றிய போலிஸார்பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அருகில் இருந்த சுத்தியலையும் கைப்பற்றினர். மேலும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை தலைமையிலான போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம் தான் இந்தக் காஞ்சிபுரம் சம்பவம்.

Also Read: 14 வயது சிறுமி எரித்துக் கொலை - ஒரே வாரத்தில் பொசுக்கப்பட்ட இரண்டாவது பிஞ்சு!