Tamilnadu
“பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை உடனடியாக சீராய்வு செய்யவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!
பெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா பேரிடர் முடக்க காலத்தில் மாநிலம் முழுவதும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி மகளிருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூருக்கு அருகே நயினார்குப்பம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பெற்றோர்கள் கூறியதன் அடிப்படையில் இப்பொழுது அந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றப்பட்டு அதே ஊரைச் சேர்ந்த இருவர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீராமன் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருக்கிறது என அவரது தந்தை புகார் அளித்துள்ளார். இதுவரை அதில் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. இப்படி ஒவ்வொருநாளும் ஏராளமான வன்முறை நிகழ்வுகள் ஊடகங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தற்போது காவல்துறை உயரதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் தமது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் மகளிருக்கு எதிரான வழக்குகள் எந்த நிலையில் உள்ளன என்பதைப் பற்றி உடனடியாக சீராய்வு செய்யவேண்டும். குறிப்பாக, போக்சோ சட்டத்தின் கீழான வழக்குகளை தனிக்கவனம் செலுத்தி சீராய்வு செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்