Tamilnadu

“நேரத்திற்கு உணவும் தருவதில்லை; சிகிச்சையும் இல்லை” - கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை கொருக்குப்பேட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உணவு வழங்காத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் ஏழாயிரத்தைக் கடந்துள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால், மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள கல்லூரிகள்,மாநகராட்சி பள்ளிகள், ஆகியவற்றை தற்காலிக சிறப்பு முகாம்களாக மாற்றி, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அங்கே அனுமதித்து வருகின்றனர்.

இவ்வாறு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த நேரத்தில் தரமான உணவு மற்றும் சிகிச்சை அளிப்பதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதனை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள கே.சி.எஸ் காசிநாடார் கல்லூரியில் சுமார் 300 பேர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ளவர்களுக்கு குறித்த நேரத்தில் உணவுகளை சரியான முறையில் வழங்குவதில்லை என்றும், சிகிச்சை அளிப்பதில்லை என்றும் அங்கு உள்ள நோயாளிகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கொருக்குபேட்டை இன்ஸ்பெக்டர் கவிதா சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டார். ஆனாலும் போலிஸாரின் சமரசத்தை ஏற்காமல், தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலிஸாரின் அரை மணி நேர சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அங்கு தங்கியுள்ள நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “இங்கு நாங்கள் 300 பேர் தங்க தங்கியுள்ளோம். எங்களுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கான மருந்து மாத்திரைகள் எதுவும் தருவது கிடையாது. மேலும் காலை உணவு சுமார் பத்து மணிக்கு தான் தருகிறார்கள் அந்த உணவும் தரமானதாக இல்லை.

மதிய உணவாக உப்பில்லாத சாப்பாடுதான் தருகிறார்கள். இங்குள்ள 300 பேருக்கும் இரண்டே இரண்டு கழிவறைகள் தான் உள்ளன. இதுகுறித்து நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் புகார் அளித்தால் அவர்கள் ஏனோதானோ என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். இங்கு நாங்கள் சிறையில் இருப்பது போல் இருப்பதற்கு வீட்டிலேயே இருந்து விடலாமே” எனக் குமுறுகின்றனர்.

ஒரு பக்கம் அரசும், அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் வழங்குவதாகக் கூறி வரும் நிலையில் முகாமில் இருக்கும் மக்களே முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் சூழல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலை இருப்பதாகவும், அரசு இன்னும் மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also Read: “கொரோனா பாசிட்டிவ் - நெகட்டிவ் குளறுபடியால் பலியான பெண்” : சுகாதாரத்துறை அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை!