Tamilnadu

சென்னையில் உச்சமடையும் கொரோனா பரவல் : ஊரடங்கை தீவிரப்படுத்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது?- ஐகோர்ட் கேள்வி!

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 38 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 27 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 70 சதவிகிதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும், முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும், அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலா வருகின்றன.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை காணொளிக்காட்சி மூலம் விசாரித்து முடித்த பின், தமிழக அரசின் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு எதையும் எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து நாளை விளக்கம் அளிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே, சென்னையில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சென்னை, மும்பை போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அபாய கட்டத்தில் உள்ளது” - ICMR ஆய்வில் அதிர்ச்சி தகவல்!