Tamilnadu
கிருமி நாசினி பயன்படுத்தியதற்கு ரூ.100 வசூல்... கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட மதுரை தனியார் மருத்துவமனை!
கொரோனா பரவல் காரணமாக உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி, அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் கூறி வருகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த சூழலில் தனிமனித சுகாதார கட்டுப்பாடுகளும் அத்தியாவசியமாகி வருகிறது.
அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், அறைகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு அதிகபடியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயித்து அண்மையில் தமிழக அரசும் வெளியிட்டது. இந்த நிலையில், மதுரையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் ஆலோசனைக்காக வந்தவர்களிடம் கிருமி நாசினிக்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏ.ஆர்.சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கிளை ஒன்று மதுரையில் இயங்கி வருகிறது. அங்கு மருத்துவ ஆலோசனைக்கு வந்த பெண் ஒருவரிடம் ஆலோசனைக்காக ரூ.300ம், கிருமி நாசினிக்காக ரூ.100ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இது நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண கடைகளிலேயே வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் போது கிருமி நாசினிகள் கொடுக்கப்படும் நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கிருமிநாசினி வழங்கியதற்கு கட்டணம் வசூலிப்பது மிகப்பெரிய சுரண்டலாகவே கருதப்படுகிறது என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த அரசு, மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக கிருமிநாசினி கொடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!