Tamilnadu
“ஊரடங்கில் இலவச மருத்துவம் பார்க்கும் ரஹ்மான்” : மக்கள் சேவையில் நெகிழவைக்கும் இளம் மருத்துவர்!
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கடுப்படுத்த அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில், மக்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் ஊரடங்கில் பணமில்லாமல் ஏழை எளிய மக்கள் சிரமம் அடைவதை உணர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். பட்டுக்கோட்டை அருகே பள்ளிபட்டின தெருவைச் சேர்ந்தவர் ஜியாவூர் ரஹ்மான்.
இவர் கடந்த 2018ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து பட்டம் பெற்றுள்ளார். பின்னர், தஞ்சாவூரில் ஒரு தனியார் மருத்துவனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமல்லாது ஏழைமக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க தனது வீட்டிலேயே சிறிய அளவிலான கிளினிக் ஒன்றையும் நடத்திவருகிறார். தனது கிளினிக்கிற்கு வரும் ஏழை மக்களிடம் பெரும்பாலும் சிகிச்சைக்கு பணம் வாங்காமல் சிகிச்சை அளித்துவருகிறார் ரஹ்மான்.
அதுமட்டுமின்றி, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார். இதனிடையே ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் தான் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவரது பகுதியில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதால் மல்லிபட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனை மட்டும் சிகிச்சை பெற முடியாமல் சிரமங்களை சந்தித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ரஹ்மானின் கிளினிக் வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
மேலும், பலர் சிகிச்சைக்கு வரமுடியாத அளவில் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு வீட்டுக்கே தேடிப்போய் சிகிச்சை அளிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார். சிகிச்சைக்கு பணம் எதுவும் பெறாமல் இலவசமாக சிகிச்சை அளித்துவருவதுடன் உரிய ஆலோசனைகளையும் ரஹ்மான் வழங்கிவருகிறார்.
இந்த இளம் வயதில் மருத்துவர் ரஹ்மானின் இத்தகைய செயலால் அப்பகுதி மக்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். இதுதொடர்பாக ரஹ்மான் கூறுகையில், “ஊரடங்கு தொடங்கிய இந்த இரண்டு மாதங்களில் 400 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளேன். இன்னும் சிகிச்சை அளிப்பேன். மக்கள் துயரத்தில் தவிக்கும்போது அவர்களுக்கு நான் உதவி செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்? இதற்காக என்னைப் பலரும் பாராட்டுகிறார்கள். நான் என் கடமையைத் தான் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!