Tamilnadu

உச்சத்தில் கொரோனா பரவல்... “இன்று ஒரே நாளில் 805 பேருக்கு தொற்று; 7 பேர் பலி”! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று (மே 25) புதிய உச்சமாக ஒரே நாளில் 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : “தமிழகத்தில் இன்று 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 491 ஆண்கள், 314 பெண்கள். மொத்த பாதிப்பு 17,082 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே இன்று 549 பேருக்கு கொரனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக சென்னையில் இதுவரை 11,131 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்று மொத்தம் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,731 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8,230 பேர் சிகிச்சை பெற்ற்ய் வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகபட்ச மாதிரிகள் சோதனையிட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 4,21,480 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 726 பேரும், குஜராத்தில் இருந்து வந்தவர்கள் 26 பேரும் உள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை. விமானத்தின் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னையில் தீவிரமடையும் கொரோனா பரவல்... 10,576 பேருக்கு வைரஸ் பாதிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்!