Tamilnadu
“மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் முக்கியமா?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் அரசுத்தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறியதால், தமிழகம் முழுவதும் 41 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, பிரதான வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், மதுக்கடைகளை திறக்க தடை கோரிய தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த இந்த விசாரணையில், மது பழக்கமும் ஒரு கொடிய நோய். ஏழை – எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் மதுபான கடைகளுக்கு செலவழிப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊரடங்கு காலத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கிறது. தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க டாஸ்மாக் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேசமயம், டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்ற உள்ளதாகவும், மதுபான விற்பனை நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது என்று தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்க தயாராக இருப்பதாக ஹிப் பார் என்ற நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதற்கு அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள், நாளைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
விசாரணையின் போது, தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த நிலையில், தற்போது ஏன் அமல்படுத்த முடியவில்லை எனவும், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்டம் – ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
டாஸ்மாக் பதில்மனுவில், 12 கடைகளில் மட்டும் தான் பிரச்னை எழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 170 கோடி ரூபாய் எப்படி வசூல் எப்படி வந்தது என்பன உள்ளிட்ட கேள்விகளையும் எழுப்பினர்.
முழுமையான மதுவிலக்கை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர்களும் அக்கோரிக்கையை எழுப்பவில்லை எனத் தெரிவித்தனர். மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர, வருமானம் அல்ல எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும், சாதாரண சிறிய கிராமங்களில் 400, 500 பேர் மதுக்கடைகள் முன்பு குவிந்து நிற்கின்றனர். இதனால் பொது அமைதியோடு குடும்ப அமைதியும் பாதிக்கப்படும் அதை எப்படி அரசு தடுக்கப் போகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!