Tamilnadu

‘பெயர் வைத்தால் போதுமா ?’ : தூய்மைப் பணியாளர்களைக் கண்டுகொள்ளாத அரசை எதிர்த்து போராட்டம்!

உலகளவில் கொரோனா எனும் கொடிய வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளுடன் நேரடியாகப் போராடுவது இந்தத் தூய்மைப் பணியாளர்கள்தாம். தரமான முகக்கவசம், கையுறைகள் போன்றவை இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் பற்றியும் கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசுதான் எடப்பாடி அரசு செயல்படுகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்குத் தூய்மைப் பணியாளர்கள் என்று பெயர் சூட்டினால் மட்டும் போதுமா? போதாது. அதனை விட கொடூரமாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூய்மைப் பணியாளர்கள் சேவையைப் பாராட்டி அவர்கள் காலில் விழுந்து மரியாதை செய்கிறார்.

ஆனால், அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அமைச்சர் செல்லூர்ராஜு வீடு அருகில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை சி.ஐ.டி.யு மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உப கரணங்களான முகக் கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவைகளை முறையாக வழங்க வேண்டும்.

மாநகராட்சி தொழிலாளர்களுக்கு கொரோனா பேரிடர் கால ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும், தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு பணிக்காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி நிதியுதவி வழங்கிட வேண்டும்.

காலமுறை ஊதியம் மற்றும் ஒப்பந்த தொழிலாளராக உள்ள தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனக்கோரி இன்று அமைச்சர் செல்லூர்ராஜு வீடு அருகிலுள்ள 36, 37 வார்டு அலுவலகம், அருள்தாஸ்புரம் நீரேற்று நிலையம், சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகம், நெல்பேட்டை வார்டு அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார். இதனையடுத்து சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணிக்கு திரும்பும் படி கோரினார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளின் உறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: “குப்பை வண்டியில் தூய்மைப் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் கொடூரம்” : அரசின் பாதுகாப்பு லட்சணம் இதுதானா?