Tamilnadu

“ஆவின் நிறுவனத்தில் ஊழல், முறைகேடு - செயற்கையாக உருவாக்கப்படும் பால் தட்டுப்பாடு” : கொதிக்கும் முத்தரசன்!

பால்வளத்துறை அமைச்சர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளுக்கு மௌன சாட்சியாக இருந்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரு மாநகரம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஆவின் நிறுவனம் பால் விநியோகம் செய்து வருகிறது. இதற்கான முறையில் பெருமாநகரம் முழுவதும் 60 மொத்த பால் விற்பனை முகவர்கள் (ஹோல்சேல் சேல்ஸ் டீலர்கள்) செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 75 காசு முகவர் கழிவாக ஆவின் நிறுவனம் தருகிறது. இந்த மொத்த விற்பனை முகவர்கள் தான் ஆவின் நிறுவனத்தில் நேரடி வரவு செலவு செய்து வருபவர்கள்.

கொரானா பெருந்தொற்று தடுப்பு காலத்தில், தனியார் நிறுவனங்கள் சந்தையில் இருந்து ஒதுங்கியபோது, இந்த மொத்த பால் கொள்முதல் முகவர்களின் அயராத முயற்சியில் வழக்கமாக விற்பனை ஆகும் பாலை விட தினசரி 3 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தில் சி அன்ட் எப் என்ற பெயரில் பின்வாசல் வழியாக 11 நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு வழங்கப்படும் கழிவுத் தொகையுடன் மேலும் கூடுதலாக 75 காசு சேர்த்து ரூபாய் 1.50 என கழிவுத் தொகை வழங்கப்படுகின்றது. இவர்கள் மட்டுமே பால் விநியோகப் பணியில் தனித்து ஈடுபடுவதில்லை. இவர்களோடு மொத்த பால் விற்பனையாளர்களும் இணைந்து சென்னை பெருநகரம் முழுவதும் பால் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சி அன்ட் எப் நபர்கள் மாதாந்திர பால் கூப்பன்கள் மூலம் வீடுகளுக்கு பால் விநியோகிப்பதாகக் கூறிஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் செய்து அதனை கூடுதல் லாபத்திற்கு விற்று வருகின்றனர். இத்தோடு மொத்த பால் விற்பனை முகவர்களுக்கு பால் பண்ணையில், பால் வழங்குவதில் தலையிட்டு விருப்பு, வெறுப்பு அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட தொகையை மாதாந்திர மாமூலாக கொடுக்கவேண்டும் என பால் விற்பனையாளர்களை நிர்பந்தித்து வருகின்றனர். இதனால் சென்னை பெருநகர மக்களுக்கு செயற்கையான பால் தட்டுபாடு உருவாக்கப்படுகிறது.

இதில் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் செயல்படும், சி அன்ட் எப் அதிகார வர்க்கத்தின் செல்வாக்கு பெற்றவர் என்பதால் ஆவின் உயர் அலுவலர்கள் உதவியுடன் ஆவின் நிறுவனத்தை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்தி வருகின்றார் என்ற புகார் எழுந்துள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளுக்கு மௌன சாட்சியாக இருந்து வருகிறது.

ஊழல் முறைகேடுகளால் ஆவின் நிறுவனத்திற்கு நிதி இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இது தொடருமானால் சென்னை பெருநகர மக்கள் பால் சந்தை முற்றிலும் தனியார்துறைக்கு சென்று விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே , ஆவின் நிறுவனத்தில் சி அன்ட் எப் என்கிற முறையை முற்றிலுமாக நீக்கி விட்டு, மொத்த கொள்முதல் செய்து வரும் பால் விற்பனை செய்யும் முகவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “களத்தில் காலமெல்லாம் துணையிருப்பேன் உங்களில் ஒருவனாக!” - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்!