Tamilnadu

“அ.தி.மு.க ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்” : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா நிர்வாகியை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து, கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாநகர காவல்துறை ஏற்படுத்தியுள்ள அநீதியை சரி செய்ய தமிழக அரசு உடனே தலையிட்டு சிம்ளிசிட்டி இணையதள நிர்வாகியை விடுதலை செய்வதுடன் வழக்கை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிம்ப்ளிசிட்டி.இன் என்கிற செய்தி இணையதளம் கோவையிலிருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 23-04-2020 வியாழன் அன்று சிம்ப்ளிசிட்டி இணையதளத்தின் ஓளிப்பதிவாளர் பாலாஜி மற்றும் செய்தியாளர் ஜெரால்ட் ஆகிய இருவரையும் எந்தக் காரணமும் சொல்லாமல் எட்டு மணி நேரத்திற்கும் மேல் கோவை காவல்துறையினர் சிறைபிடித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

ஏன் பத்திரிகையாளர்களை பிடித்து வைத்துள்ளீர்கள்? என்ன குற்றம் செய்தார்கள்? என்ன புகார்? என்ன வழக்கு? இப்படி பல என்ன? கேள்விகளுக்கு ஒரு பதிலும் இல்லை காவல்துறையிடம் இருந்து. கொரோனா காலக்கட்டம்,எவ்வித சங்கடத்தையும் உருவாக்கிவிடக்கூடாது என பொறுப்புணர்வுடன் கொளுத்தும் வெயிலில் மிகுந்த வேதனையுடன் சகோதர பத்திரிகையாளர்களுக்காக கோவை பத்திரிகையாளர்கள், பொறுமை காத்துள்ளனர்.

23-04-2020 அன்று மாலை சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகி சாம் ஆர்.எஸ் புரம் காவல்நிலையத்திற்கு வந்த பின்னரும் சில மணி நேர காத்திருப்புக்கு பின்னரே ஊடகவியலாளர்கள் பாலாஜி மற்றும் ஜெரால்ட் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விடுவித்தனர். இணையதள நிர்வாகி சாம் என்பவரை கைது செய்ய இரு ஊடகவியலாளர்களை பணைய கைதிகளை போன்று கோவை மாநகர காவல்துறை நடத்திய போக்கு அறுவெறுக்கத் தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் சிலர் முறைகேடு செய்வதாகவும் வெளியான செய்தியையும் காரணம் காட்டி, இந்த செய்திகள் அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராக போராடுவதற்கு தூண்டும் வகையில் இருப்பதாகவும், அரசுக்கு கெட்டபெயரை உண்டாக்குவதோடு அரசு ஊழியர்களின் மத்தியில் கொந்தளிப்பான நிலை ஏற்பட செய்து மலிவான விளம்பரம் தேடுகிறது.

மேலும் இந்த செய்திகளின் விளைவால் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு விடும் என்றும் ஏழை எளிய மக்களுக்குஅரசின் நலதிட்டங்கள் சென்றடையாமல் தடைபட்டு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்படும் என சுற்றி சுற்றி குற்றசாட்டுகளை தொகுத்து கோவை மாநகராட்சி உதவி ஆணையர் - பணியாளர் நிர்வாகம் திரு.எம்.சுந்தரராஜன், கோவை ஆர்.எஸ் புரம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து ஆண்ட்ரூ சாம் மீது, அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தல் (188 IPC) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுதல் (505(1)(b) IPC) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188-ன் கீழ் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை “ஜீவானந்தம் எதிர் அரசு” என்ற வழக்கில் சமீபத்தில் அறிவுறுத்தியும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சிப்பது பிரிவு 505(1)(b) –ன் குற்றமாகாது எனச் சொல்லி சென்னை உயர்நீதி மன்றம் பல முதல் தகவல் அறிக்கைகளை சமீபத்தில் தள்ளுபடி செய்துள்ளது. இருந்தும், விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டால், செய்தியாளர்களை பொய்யான வழக்கில் கைது செய்து துன்புறுத்துவோம் என்ற போக்கு ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. செய்தி வெளியிட்டுக்காக உருட்டல், மிரட்டல், பொய்வழக்கு, கைது, சிறை என இந்த போக்கு மிக மிக ஆபத்தானது.

கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாநகர காவல்துறை ஏற்படுத்தியுள்ள இந்த அநீதியை சரி செய்ய தமிழக அரசு உடனே தலையிட்டு சிம்ளிசிட்டி இணையதள நிர்வாகியை விடுதலை செய்வதுடன் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அதிகார அத்துமீறல் வேண்டாம்; ஊடகத்தினரை சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!