Tamilnadu

“தமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா; 5 பேரின் உடல்நிலை மோசம்” - பீலா ராஜேஷ் தகவல்! #Corona

கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது தாக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 690 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :

“தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 738 பேரில் 5 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. வேலூரில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4 மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 60,739 பேர் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 230 பேர் உள்ளனர்.

சென்னையில் புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Also Read: #Corona LIVE | ஒரே நாளில் 508 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 4,789 ஆக அதிகரிப்பு!