Tamilnadu
“13 வகையான ஆலைகள் இனி இயங்கும்?” - அறிவிப்பை உடனே திரும்பப் பெற்ற தமிழக அரசு! #CoronaLockDown
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள், மருந்தகங்கள் தவிர அனைத்து வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், தொழில் நிறுவனங்களும், கூலித் தொழிலாளர்களும் இந்த ஊரடங்கினால் வேலையின்றி பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சிமெண்ட், உரம், நிலக்கரி, இரும்பு, காகிதம், ஜவுளி உள்ளிட்ட 13 வகை ஆலைகளை இயக்க தமிழக அரசு தற்போது அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில் “எஃகு, சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட், ரசாயனம், உரம், ஆயத்த ஆடைகள் தவிர்த்த ஜவுளி ஆலைகள் , சர்க்கரை ஆலை, கண்ணாடி, பட்டறை தொழிற்கூடங்கள், தோல் பதனிடும் ஆலைகள், காகிதம், டயர் மற்றும் கழிவுப் பொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை இனி இயங்கும்.
குறைவான பணியாளர்களை கொண்டு சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும். பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் எனவும் தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று பாதிப்பில் நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்த நிலையில் தமிழகம் இருக்கும் சூழலில், தொழிற்சாலைகளை இயக்க அனுமதி அளித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகளில் சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை அரசு சரிவரக் கண்காணிக்குமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும், தொழிலாளர்கள் கொரோனா அச்சத்தால் பணிக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. தொழிலாளர்களை பணி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டு, அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் சற்று முன்னர், 13 வகையான ஆலைகள் இயங்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றது. கொரோனா அபாயம் கருதி, இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
காசா, லெபனான், ஈரானைத் தொடர்ந்து சிரியா : ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்... காரணம் என்ன ?
-
திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !
-
1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
-
மயிலாடுதுறை மக்களே.. உங்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பத்து தோல்வி பழனிசாமிக்கு வரும் தேர்தல் நிறைவான Goodbye!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!