Tamilnadu

கொரோனா ஊரடங்கு : “கொசுக்களுடன் போராடும் தமிழக போலிஸ்” - (ஆல்பம்) #CoronaLockdown

இந்தியாவில் கொரோனாவின் பிடியில் தமிழகம் 571 பாதிப்பு எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையின் கூற்றின்படி, இதில் 500க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும், எஞ்சிய அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும், அவர்களுடன் பழகியவர்களும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், தமிழகத்தில் இதுவரை கொரோனா பரவல் சமூகப் பரவல் அளவை எட்டவில்லை. இரண்டாம் கட்டத்திலேயே உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்பு சமூகப் பரவலாகி விடக்கூடாது என்பதற்காக மார்ச் 25ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற எதற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், எச்சரிக்கையும் விடப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் காலியாக உள்ள பகுதிகள் எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே வெளியே சுற்றித்திரிவதை காணமுடிகிறது. அவ்வாறு அநாவசியமாக வெளியே வருபவர்களை போலிஸார் கண்டித்தும், வழக்குகள் பதிவு செய்து, கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேலான போலிஸார் இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சிறப்பு காவல் பிரிவைச் சேர்ந்த பட்டாலியன் காவலர்களே அதிகப்படியாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவ பணியாளர்களைப் போல காவல்துறையினரும் நேரத்துக்கு உண்ண உணவு கிடைக்காமல், குடும்பத்தினரைச் சந்திக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். நேரம் காலம் பார்க்காமல், வார விடுப்பு என எதையுமே எடுக்காமல் போலிஸார் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பணி நெருக்கடி மட்டுமல்லாமல், கிடைத்த இடங்களில் தூங்குவதால் கொசு கடிக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என போலிஸார் புலம்பும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், தங்களுக்கு தேவையான உதவிகளை உயர் அதிகாரிகள் அரசிடம் கேட்டு செய்துதர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.