Tamilnadu

“டாஸ்மாக் மூடலால் கள்ளச்சாராய விற்பனை படுஜோர்” : தமிழகத்தில் மதுவால் நிகழும் கொடுமைகள்- கவனிக்குமா அரசு?

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் பொதுஇடங்களில் மக்கள் கூடும் வகையில் செயல்படும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற முக்கிய நகரங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் இது மது குடிப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது; அவர்களை வீபரித முடிவு எடுக்கவும் வைத்துள்ளது.

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த கைது ஒருவர் பாலக்காடு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மது என நினைத்து அங்கு சானிடைசரை குடித்து பரிதாமகாக உயிரிழந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் மது கிடைக்காததால் ஆம்பூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேசன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது கடைகளை விரிக்கத் துவங்கியுள்ளனர். சில இடங்களில் இதனைத் தட்டிக்கேட்டவர்கள் மீது நாட்டுத்துப்பாக்கி கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையில் உள்ள, இந்திரா நகர் பச்சை காலனியைச் சேர்ந்த அய்யனார் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் வீட்டில் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பானை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதுமட்டுமின்றி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், டாஸ்மாக் கடைகளை உடைத்து சூறையாடும் அளவுக்குச் சென்றது மதுப்பிரியர்களின் அட்டகாசம். மேலும் பல இடங்களில் 144 தடை உத்தரவு அறிவித்ததுமே, ஆளும்கட்சியினரின் ஆதரவோடு பார் நடத்துபவர்கள், பெட்டி பெட்டியாக அரசு விலைக்கே பாட்டில்களை வாங்கிப் பதுக்கி அதிக விலைக்கு தற்போது விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேபோல் கடந்தவாரம் நாகையைச் சேர்ந்த இருவர் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி கடத்தி வந்துள்ளனர். அப்போது, செல்லூர் அருகே வரும்போது எதிரே வந்த ஆட்டோவில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மதுபாட்டிலை கடத்தி வந்த இருவரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்காமல் சிதறிய மதுபாட்டில்களை ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர்.

அதுமட்டுமல்லாது சேலத்தில் கள்ளச்சாராயத்தை டோர் டெலிவரி செய்யும் அளவுக்கு ஒரு கும்பல் இறங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கல்வராயன் மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணி படுஜோராக நடைபெற்று வருகிறது. இங்கு காய்ச்சும் சாராயத்தை, லாரி டியூப்புகளில் நிரப்பி, ஆத்தூர், செல்லியம்பாளையம், ராமநாயக்கன்பாளையம், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, உள்ளிட்ட பகுதிகளில் பாக்கெட்டுகளாக மாற்றி பகிரங்க விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

செல்போனில் அழைப்போருக்கு, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கள்ளச்சாராயத்தை டெலிவரி செய்து வரும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். 100 மில்லி அடங்கிய சாராய பாக்கெட் 50 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்ட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினரின் ஒத்துழைப்போடே கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுபோல சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஏன் இன்றைய தினம் கூட புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் மாற்று போதைக்கு முயற்சி செய்யும் நோக்கில், முடி திருத்தும் கடைகளில் சேவிங் செய்த பிறகு முகத்தில் தடவும் லோஷனை, 7அப் குளிர்பானத்தில் கலந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில், மது கிடைக்காத விரக்தியில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொண்டதாலும்,தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும், விரக்தி மனநிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு பாஸ் தருவதற்கான உத்தரவை அந்த அரசாங்கம் பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது.

இந்தச் சூழலில், டாஸ்மாக் மூடல் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளையும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். மதுவுக்கு அடிமையானவர்கள் வீபரித முடிவுகளை எடுப்பதற்குள் அவர்களுக்கு தகுந்த ஏற்பாட்டை அரசு செய்துகொடுக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: ''கணவனுக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் கொள்ளையடித்த மனைவி'' - அதிர்ச்சி தகவல்!