Tamilnadu

தேர்தல் தகராறு : ‘நீயா நானா’ என அடிதடியில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் - கோத்தகிரியில் பரபரப்பு!

கோத்தகிரி தலைமை கூட்டுறவு பண்டக சாலை நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில் 11 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தப் பதவிகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு ஆதரவாளர்கள் ஆகியோர் இரு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டனர்.

தேர்தல் முடிந்த பிறகு தலைவராக சாந்திராமு அணியைச் சேர்ந்த வடிவேல் வெற்றி பெற்றதாகவும், துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட புத்திசந்திரன் அணியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது மனு உரிய முறையில் சமர்பிக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டு, அவருடன் போட்டியிட்ட மாதன் வெற்றி பெற்றதாகவும் தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த பார்த்திபன், தேர்தல் அலுவலரிடம் எனது மனு எந்த காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் எனக்கூறி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் கையில் வைத்திருந்த வேட்புமனு படிவத்தைப் பறித்துக் கிழித்தெறிந்தார்.

இதையடுத்து, சாந்திராமு எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் பார்த்திபனை தாக்கினர். உடனே அவரது ஆதரவாளர்களும் திருப்பித் தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார் கட்சி நிர்வாகிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து குன்னூர் எம்.எல்.ஏ. ஆதரவுடன் போட்டியிட்ட வடிவேல் தலைவராகவும், துணைத்தலைவராக மாதன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுங்கட்சியின் இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியினரின் அடிதடிப் போக்கு மக்களையும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

Also Read: #LIVEUpdate | “அ.தி.மு.க அரசின் மது விலக்கு கொள்கை இதுதானா?” - தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி! #TNAssembly