Tamilnadu
“போதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்யுங்கள்” - தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சாலை விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரத்து 950 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாகவும், அவர் தற்போது உடல் குறைபாடின்றி நல்ல முறையில் இருப்பதாகவும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மணிகண்டன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரைப் பரிசோதித்த சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், மூளையில் அடிபட்ட அவர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.
அதன் அடிப்படையில் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை 67 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்ட நீதிபதிகள், மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்காணிக்க தனிப்படைகளை அமைக்கவேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் வலியுறுத்தியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் மதுபோதையில் செல்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிய போதுமான அளவுக்கு மூச்சுப் பரிசோதனை கருவிகளை காவல்துறைக்கு வழங்கவேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்தும்படி, வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
அதேபோல மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாக மாதந்தோறும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!