Tamilnadu

“மதக் கலவரத்தை தூண்ட, சொந்த வாகனத்திற்கே தீ வைத்த இந்து முன்னணி நிர்வாகி” - விசாரணையில் உண்மை அம்பலம்!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தும் ஜன்னல் கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியே வந்த சக்திவேல் எரிந்துகொண்டிருந்த வாகனத்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அணைப்பதற்குள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனையடுத்து இந்து முன்னனி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து வெளியான தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலிஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், சக்திவேல் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால் போலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், தனது இருசக்கர வாகனத்தை சக்திவேல் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சக்திவேல் மற்றும் முகேஷ் ஆகியோர் தீ வைத்து எரித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையில் ஒன்றிய பொறுப்பிலிருக்கும் சக்திவேல் தனக்கு மாவட்ட அளவில் பெரிய பொறுப்பு வேண்டும் என்ற நினைப்பில் இதுபோன்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

தற்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் தனது வாகனத்தை எரித்தால் தன் மீது பரிதாபம் வரும். இதனால் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தம்மைத் தேடி வந்து ஆறுதல் கூறி பெரிய பொறுப்பு வழங்குவர் என்ற எண்ணத்தில் இப்படிச் செய்தாகவும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, தான் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்தாததாலும், இரு சக்கர வாகன கடனைக் கட்ட முடியாமலும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Also Read: “டீ பார்ட்டி போல கோமுத்ரா பார்ட்டி” : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோமியம் வழங்க முடிவெடுத்த இந்து மகாசபை !