Tamilnadu

சென்னை ஐ.ஐ.டி கழிப்பறையில் செல்போன் கேமரா : அலறிய மாணவி - வெளிப்பட்ட உதவி பேராசிரியரின் நாசவேலை!

சென்னை ஐ.ஐ.டியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடத்தில் சில மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு நேரங்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் இரவு நேரங்களிலும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவி ஒருவர் ஆய்வகத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தச் சென்றபோது சந்தேகத்திற்குரிய வகையில் மெலிதாக சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக கழிவறையை ஆய்வு செய்த மாணவி ஜன்னல் அருகே செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டறிந்து குரல் எழுப்பியுள்ளார். இதனால் அங்கிருந்த மாணவர்கள் மறைந்திருந்த உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜியை சுற்றி வளைத்தனர்.

சுபம் பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜி ஐ.ஐ.டி-யில் விண்வெளி பொறியியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். சென்னை ஐ.ஐ.டி-யில் பணியாற்றும் அவர் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இரவில் மாணவிகள் பயிற்சி எடுக்கும் ஆய்வக பொறுப்பாளராக இருந்துள்ளார். அவருடைய செல்போனை மாணவிகள் ஆய்வு செய்தபோது அதில் பல மாணவிகளை ரகசியமாக படம் பிடித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உதவி பேராசிரியரிடம் இதுகுறித்துக் கேட்க அவர் உடனடியாக அனைத்து வீடியோக்களையும் அழித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜியை உடனடியாக கைது செய்தனர். மேலும் அவருடைய செல்போனை தடயவியல் துறைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மாணவிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read: விடுதியில் அடைத்து வைத்து விதவைப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை : உ.பி-யில் சிக்கிய பா.ஜ.க MLA!