Tamilnadu

"என் திருமணவிழாவில் டி.ஏ.கலியமூர்த்தி இசை முழங்கியது இன்னும் செவிகளில் ஒலிக்கிறது"-மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூரைச் சேர்ந்த பிரபல தவில் வித்வான் டி.ஏ.கலியமூர்த்தி நேற்று மாரடைப்பால் காலமானார். தவில் இசைக்கலையின் அடையாளமாக விளங்கிய கலியமூர்த்தி 1981ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசைக் கருவியான தவில் இசையில் வல்லுநராக விளங்கிய கலைமாமணி திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழிசைக் கருவியான தவில் இசையில் வல்லுநராக விளங்கிய கலைமாமணி திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையடைகிறேன். இசைத்துறையில் தனக்கானத் தனி இடத்தைப் பெற்றவர் கலியமூர்த்தி.

என் திருமண விழாவில் கோடையிடி போல அவரது இசை முழங்கியது இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, டி.ஏ.கலியமூர்த்தியின் இசைத்திறமையைப் பாராட்டும் வகையில் கலைமாமணி விருது அளித்து சிறப்பித்தார்.

திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இறப்பினால் துயர்ப்படும் குடும்பத்தினர், நண்பர்கள், இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் ஆறுதலை உரித்தாக்குகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.