Tamilnadu

அறுந்து விழுந்த ராட்சத கிரேன் : உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பலி - ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் சோகம்!

நடிகர் கமல் நடிக்கும் 'இந்தியன் - 2' படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர் என பலர் இந்தப் படத்தின் பணிக்காக தீவிரம் காட்டி வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் வரும் சண்டைக்காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நாசரேத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

அப்போது சண்டைக் காட்சிக்காக அமைக்கப்பட்ட ராட்சத கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் அதன் அருகில் இருந்த ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா மற்றும் ஊழியர்கள் மது, சந்திரன் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டோர் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது படப்பிடிப்புத்தளத்தில் இருந்த நடிகர் கமல், இயக்குநர் சங்கர் ஆகியோர் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து நாசரேத்பேட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட CAA-வுக்கு எதிரான 2 கோடி கையழுத்து படிவங்கள்!