Tamilnadu

“CAA-வுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் - வழக்குப்பதிவு” : நள்ளிரவில் போலிஸ் வெறியாட்டம்! - VIDEO

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை துவங்கினார்கள்.

நேற்று மதியம் போராட்டம் தொடங்கியபோதே போலிஸார் பொதுமக்களை கலைந்துபோகும் படி எச்சரித்தார். ஆனாலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என போலிஸாரின் மிரட்டலுக்கு அடிபணியாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது போராட்டக்காரர்களை போலிஸார் தடுக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலிஸார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஜனநாயக முறையில் போராடியவர்களை கைது செய்தற்கும் கண்டனம் தெரிவித்து பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஐந்து மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்த போராட்டத்தைக் கலைக்க போலிஸார் தடியடி நடத்தினர்கள். அப்போது பெண்களையும் ஆண் காவலர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்தனர்.

மேலும் தள்ளுமுள்ளு, நெரிசலில் சிக்கி ஒருவர் இறந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. போலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலிஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.

சென்னை போலிஸார் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையை ஏற்படுத்திய போலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: “ஆட்சியே போனாலும் பரவாயில்லை” : CAA எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நாராயணசாமி!