Tamilnadu

விண்ணைப் பிளந்தது தமிழ் மந்திரம்... குடமுழுக்கு கண்ட தஞ்சைப் பெருவுடையார் கோவில்!

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெற்றது. இதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அறநிலையத் துறை என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

அதன்படி, இன்று காலை 7:25 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் குடங்கள் புறப்பட்டன. காலை 9:30 மணிக்கு ராஜகோபுரத்திற்கும், அதனைத் தொடர்ந்து பெரிய கோவில் விமானம் மற்றும் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. 10 மணியளவில், மூலவர் பெருவுடையாருக்கு, ஆராதனை நடைபெற்றது.

தமிழிழும், சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற திருக்குடமுழுக்கு நிகழ்வை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரடியாக தரிசித்தனர். ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டபோது, பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.

இந்நிலையில், ட்விட்டரில் தஞ்சாவூர் பெரிய கோவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. #ThanjavurBigTemple என்ற ஹேஷ்டேக்கில் பலரும், கருத்து பதிவிட்டும், குடமுழுக்கு தொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்தும் வருகின்றனர்.

Also Read: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துக : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!