Tamilnadu

"உங்கள் அரசுப் பணியே வேண்டாம்” - சுகாதாரத் துறை செயலர் கேள்வியால் மன உளைச்சலடைந்த அரசு மருத்துவர் ஆவேசம்!

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறியல் துறைத்தலைவராகப் பணிபுரியும் பேராசிரியை பூவதி ஸ்ரீஜெயந்த், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷின் கேள்விகளால் மன உளைச்சல் அடைந்து, ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு வீடியோ கான்ஃபரன்சிங்கில் இருந்து திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவர்கள் மிகுந்த நெருக்கடியோடு அதிக நேரம் பணி செய்வதால் பலரும், கடும் மன உளைச்சல் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், மேலிடத்திலிருந்து, நிர்வாகத்தின் தவறுகளுக்கு சில மருத்துவர்களை பலிகடாவாக்கும் போக்கும் தொடர்கிறது.

சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், ஒவ்வொரு மாவட்டங்களின் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, மரணம் தொடர்பான விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை இணை, துணை இயக்குநர்களிடம் கேட்காமல், துறைத் தலைவரிடம் கேட்பதாகவும், அவர்களைக் கடிந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறியல் துறைத்தலைவராகப் பணிபுரியும் பேராசிரியை பூவதி ஸ்ரீஜெயந்திடம் வீடியோ கான்ஃபரன்சிங் உரையாடலின்போது கர்ப்பிணி பெண்களின் மரணம் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளார் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ். பேராசிரியை பூவதி, இதுகுறித்து விளக்க முயற்சிக்க, நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்ததால் அவர் ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு வீடியோ கான்பரன்சிங் அறையிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.

இதுதொடர்பாக, பேராசிரியை பூவதி ஸ்ரீஜெயந்த் விளக்களித்துள்ளார். அதில், "நான் செய்த பணிகளை விளக்க விரும்பவில்லை. நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கும், நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை நிறைவேற்றுவதற்கும் நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நான் அனுபவித்த மன அழுத்தத்திற்கு நிச்சயமாக எனது ஆயுட்காலம் குறைகிறது.

இப்போதெல்லாம் வலுவான சங்கத்துடன் இருக்கும் பணியாளர் செவிலியர்களிடமிருந்து வேலையைப் பெறுவது மிகவும் கடினம். இன்று விவாதிக்கப்பட்ட ஒரு மரண விவகாரத்தில் என் பங்கு எதுவும் இல்லை. எங்கள் மதிப்பிற்குரிய சுகாதாரத்துறை செயலரின் அறிவுறுத்தல்களால் நான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்.

எனக்கும் சுயமரியாதை உண்டு. இதற்கு மேல் இச்சேவையைத் தொடரமுடியாது. குறைந்தபட்சம் என்னை விருப்ப ஓய்வில் செய்ய அனுமதிக்கவேண்டும். உங்கள் அனைவருக்கும் நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த மருத்துவப் பேராசிரியை அதிரடியாக ராஜினாமா முடிவெடித்திருப்பது அரசு மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசு இதில் தலையிட்டு மருத்துவர்களை மன உளைச்சலிலிருந்து காக்கவேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: ’மருத்துவர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கையை கைவிடுங்கள்’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு !