Tamilnadu

“ராமேஸ்வரத்திற்கு திதி கொடுக்க வந்தோம்; தேர்வு எழுதினோம்” - TNPSC முறைகேட்டில் 99 பேரை சிக்கவைத்த பதில்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் - 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.

தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்கள், இந்த இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது.

இதனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 13-ம் தேதி காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. அந்த இரு மையங்களில் தேர்வெழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' என அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றதாகவும் அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வர முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Also Read: TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? : 99 பேருக்கு வாழ்நாள் தடை - வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் இன்று கைது செய்யப்பட்டனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மைத் தேர்வு அதிகாரியாக செயல்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் காப்பி அடிக்க உதவியதாகவும், விடைத் தாள் (OMR sheet) மாற்றிய குற்றச்சாட்டிலும் சி.பி.சி.ஐ.டி.,யால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.