Tamilnadu
தமிழக அரசியலில் வெற்றிடமா? : "காலம் உருவாக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின்" - வைகோ பெருமிதம்!
புத்தாண்டையொட்டி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
“கோலம் போட்ட பெண்கள் மீது வழக்கு போடும் அலங்கோல ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. மத்தியில் பெரும்பான்மை கிடைத்து விட்டதால் வேகமாக இந்துத்துவா கொள்கையை பா.ஜ.க அரசு செயல்படுத்தி வருகிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியை எல்லா இடங்களிலும் திணிப்பதற்கான வேலைகள் நடக்கின்றன.
ரெயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது என்று அந்தத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்து இருந்தார். ஆனால் 150 ரெயில்களுக்கு ஏல அறிவிப்பு விடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு சொல்வதற்கும், செய்வதற்கும் எவ்வளவு வேறுபாடு?
தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலைமை மிக பரிதாபமாக உள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். ஆனால் மத்திய அரசுக்கு கை கட்டி சேவகம் செய்வதால் தமிழக அரசுக்கு நிர்வாக திறமையில் முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பணம் பெரும் அளவு கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எத்தகைய முயற்சிகள் செய்திருந்தாலும் தி.மு.க கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (சட்டசபை தேர்தல்) ஆட்சி மாற்றத்துக்கு, முன்னோட்டமாக இந்த ஆண்டு அமையும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களை இலங்கையில் அவர்கள் வசித்த பகுதிகளுக்கே அனுப்பவேண்டும் என்பது என்னுடைய கொள்கை ஆகும். அதே வேளையில் அவர்கள் இங்கேயே வாழ வேண்டும் என்று விரும்பினால் குடியுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வைகோவிடம், ‘கலைஞர்- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, ‘காலங்கள் தலைவர்களை உருவாக்குகிறது. அந்த இலக்கணங்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்’ என்றார்.
பேட்டியின்போது ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வக்கீல் அணி செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!