Tamilnadu

கடந்த 20 வருடங்களில் தமிழகத்தை உலுக்கி எடுத்த 6 என்கவுன்டர் சம்பவங்கள்!

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 பேரையும் போலிஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதற்கு நாடு முழுவதும் வரவேற்புக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன. இந்த என்கவுன்டர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோல கடந்த 20 வருடங்களில் தமிழகத்தை உலுக்கி எடுத்த என்கவுன்டர் சம்பவங்களை காணலாம்.

அல்-உம்மா இயக்கத்தினர் என்கவுன்டர்!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் 2002ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர், செப்டம்பர் 29ம் தேதி பெங்களூரில் உள்ள சஞ்சய் நகரில் உள்ள ஒரு வீட்டில் இமாம் அலியும் அவரது கூட்டாளிகளும் தங்கியிருக்கும் தகவல் அறிந்து தமிழக காவல்துறையினர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

அவர்களை சரணடையச் சொன்னபோது, அவர்கள் மறுக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

வெங்கடேச பண்ணையார்

வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் செல்வாக்குமிக்கவராக இருந்த வெங்கடேச பண்ணையார். கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வெங்கடேச பண்ணையார் தங்கியிருந்த வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர்.

அப்போது வீட்டில் இருந்தவர்களை காவல்துறையினர் சரணடைய சொல்லி உள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்ததோடு, வெங்கடேச பண்ணையார் துப்பாக்கியை நீட்டியுள்ளார். இதனால், தற்காப்பிற்காக சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.

ஆனால், வீட்டின் கதவைத் திறந்தவுடனேயே வெங்கடேச பண்ணையாரை காவல்துறை சுட்டதாக அவர் தரப்பினர் தெரிவித்தனர்.

வீரப்பன்

சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுன்டர்!

தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடைப்பட்ட வனப் பகுதியில் சந்தன மரங்கள், யானைத் தந்தம் ஆகியவற்றைக் கடத்துவதில் வீரப்பன் ஈடுபட்டிருந்தார். இவரைத் தேடுவதற்காக இரு மாநில காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆம்புலன்சில் பயணம் செய்துகொண்டிருந்த வீரப்பன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது அவருடன் அவருடைய கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மோகன்ராஜ்

கோயம்புத்தூர் சிறார் கொலை வழக்கு என்கவுன்டர்!

கோயம்பத்தூரில் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியன்று ரஞ்சித் - சங்கீதா தம்பதியின் குழந்தைகள் கடத்தப்பட்டனர். பள்ளிக்கூடத்தில் இருந்து செல்ல காத்திருந்த குழந்தைகளை மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் மனோகரன் இனைந்து கடத்தினர்.

பணம் பறிப்பதற்காக குழந்தைகளை கடத்திய அவர்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தனர். பின்னர் இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

குற்றம் நடந்த இடத்தை காட்ட அழைத்துச் சென்றபோது மோகன்ராஜ் காவலர்களைத் தாக்கி, தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து, காவலர்கள் திருப்பிச் சுட்டதில் மோகன்ராஜ் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

சென்னை வங்கி கொள்ளையர்கள் என்கவுன்டர்!

கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி சென்னை பெருங்குடியில் உள்ள ஆயுதம் தாங்கிய நான்கு பேர் தனியார் வங்கியில் நுழைந்து 19 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றனர். அதேபோல பிப்ரவரி 20ம் தேதி கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கிக்குள் நுழைந்து 14 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றனர்.

இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களும் சென்னை நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பிப்ரவரி 23ம் தேதியன்று வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒரு வீட்டை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.

அந்த வீட்டிலிருந்தவர்களை காவல்துறையினர் வெளியேறச் சொன்னபோது அவர்கள் வெளியேற மறுத்து, காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால், திருப்பிச் சுட்டதாகக் காவல்துறை கூறியது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருமே 30-35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அதில் நால்வர் பிஹாரைச் சேர்ந்தவர்கள், மற்றுமொருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அவர்களிடமிருந்து 14 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

காவலரை கொலைசெய்ததாக என்கவுன்டர்!

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் மருதுபாண்டியர் குரு பூஜை தினத்தின்போது ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ஆல்வின் சுதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் இரண்டு காவல்துறையினரும் அந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.

இந்த கொலை தொடர்பாக பிரபு உள்ளிட்டவர்கள் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஒரு வழக்கின் விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து சிவகங்கை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு இவர்கள் இருவரையும் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

அப்போது, மதுரை அண்ணா நகர் அருகே வரும்போது பிரபு, பாரதி ஆகிய இருவரும் காவலர்களைத் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்குப் பிறகு இருவரும் மானாமதுரை தீர்த்தான்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும் அவர்களை காவல்துறையினர் நிறுத்தியபோது பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளைக் கொண்டும் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காகத் திருப்பிச் சுட்டதாகக் காவல்துறை கூறியது.