Tamilnadu
பள்ளி சுவரில் இருந்து பெரியார் - அம்பேத்கர் படங்கள் நீக்கம் ; போலிஸ் பாதுகாப்போடு நடந்த அராஜகம்! (video)
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியத்தில் உள்ள அரங்கபுரம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் சுற்றுச் சுவர்களில் மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், பாரதியார், ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர் போன்ற தலைவர்களிடம் படம் வரைவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பள்ளி நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்றுள்ளார்.
அதன்படி சுவர்களில் வர்ணம் பூசி காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், அப்துல் கலாம், பாரதியார், திருவள்ளுவர் மற்றும் நேரு ஆகிய தலைவர்களின் படங்களை வரைந்துள்ளார். இந்நிலையில் சுவரின் மற்றொரு பகுதியில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்களையும் வரைய ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்கள் வரைவதால் கிராமத்தில் சாதிய மோதல்கள் உருவாகும். அதனால் அதனை நீக்கவேண்டும் எனக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி சுவற்றில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்களை வெள்ளை பெயிண்ட் கொண்டு அழித்தனர். போலிஸாரின் இந்த நடவடிக்கையைக் கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள் சுவற்றில் வரையப்பட்டிருந்த படங்களை அழிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் மக்களின் எதிர்ப்புகளை மீறி போலிஸார், அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்களை வெள்ளை பெயிண்ட் கொண்டு அழித்தனர். இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “இது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக எடுத்த நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம்.
ஏனென்றால், கடந்த 4 மாதங்களாகத் தேசிய தலைவர்களின் உருவப்படங்களுடன் சுவர்களில் வரையப்பட்டபோது எந்த குற்றமும் நிகழவில்லை. அவர்களின் புகைப்படங்கள் யார் கண்ணையும் உறுத்தவில்லை.
ஆனால், சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்கள் மட்டும் அவர்களின் கண்களைப் புண்படுத்துகிறது. அதற்குக் காரணம், அம்பேத்கரை அரசியலமைப்பை வடிவமைத்த தேசிய தலைவராக பார்க்க மறுத்து, ஒரு சாதித் தலைவராக பார்க்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “முத்துராமலிங்க தேவர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சுவரில் வரைய வேண்டும் என்று அவர்களே கூறுகிறார்கள். அவர்கள் பெரியாரைக் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். அனால், அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளவில்லை.
நீங்களும் நானும் மட்டுமே அம்பேத்கரை தேசிய தலைவராக பார்க்கிறோம், அவர்கள் அப்படி பார்ப்பதில்லை. எனவே, காந்தி, போஸ் முதல் அம்பேத்கர் வரை அனைத்து படங்களையும் நீக்க செய்ய முடிவு செய்தோம்'' என கூறினார்.
இதனையடுத்து, காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், அப்துல் கலாம், பாரதியார், திருவள்ளுவர் மற்றும் நேரு ஆகியோரின் படங்களும் சுவர்களில் இருந்து நீக்கப்பட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!