Tamilnadu

குத்தகைக்கு விடப்பட்டதா மாமல்லபுரம்?- சுற்றுலாத் தலத்தில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததாரர்!

தமிழக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மாமல்லபுரம், சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் வருகைக்குப் பின்னர் இன்னும் பிரபலமடையத் தொடங்கிவிட்டது. மாமல்லபுரத்தின் புகழை நேரில் காண்பதற்காக வசதி படைத்தவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை பலரும் வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வருகை தருகின்றனர்.

இதனை பயன்படுத்தி, தனியார் ஒப்பந்ததாரர் கூட்டம் ஒன்று கட்டண வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும் முழுமுதல் ஆதரவை கொடுத்துள்ளது. சீன அதிபர் மற்றும் மோடி சந்திப்புக்காக செய்யப்பட்ட செலவை ஈடுகட்டவும், மாமல்லபுரத்தை மேலும் தூய்மையாக வைத்துக்கொள்ளவுமே இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மாமல்லபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போதே, கார் பைக்குகளை நிறுத்துவதற்கு கட்டணமும், நுழைவுச் சீட்டுக்கும் சேர்த்தே குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட நூற்றுக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதில், வாகன நிறுத்தத்துக்கு மட்டும் நூற்றுக்கணக்கில் கட்டணம் வாங்கப்படுகிறது. சுற்றுலா பேருந்துக்கு ரூ,125, சுற்றுலா வேனுக்கு ரூ.100, கார்களுக்கு ரூ.75 மற்றும் பைக்குகளுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், கட்டண ரசீதுகளில் தமிழக அரசின் உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் துறையின் ஒப்பந்ததாரரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பேரூராட்சியின் முத்திரை ஏதும் இல்லை. மேலும், வாகனங்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு Parking at owner risk என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டண வசூலுக்காக ஒப்பந்ததாரர் தரப்பில் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் மட்டும் வசூலித்துவிட்டு அதற்கான எந்த குறிப்பிட்ட இடத்தையும் ஒதுக்காமல், வாகனங்களுக்கு என்ன ஆனாலும் உரிமையாளர்களே பொறுப்பு என குறிப்பிட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் புலம்பித் தீர்க்கின்றனர்.

இவற்றையெல்லாம் தாண்டி, விதிகளை மீறி ஐந்து ரதம், கடற்கரை கோவில் என சுற்றுலா இடங்களில் கட்டணம் வசூலிப்பதற்காகவே ஆட்களை நியமித்து, நிர்ணயித்த கட்டணத்தை விடவே அதிகமாக சுற்றுலாப் பயணிகளிடம் வசூலித்து வருகின்றனர்.

மாமல்லபுர சுற்றுலாத் தலங்களை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு குத்தகைக்கு விட்டு ஒப்பந்ததாரரின் இந்த அடாவடி கட்டண வசூலை கண்டும் காணாமல் உள்ளது மாவட்ட நிர்வாகம். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முறையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.