Tamilnadu

“பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாது” : பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்த மூதாட்டிகள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பூமலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கம்மாள், தங்கம்மாள் சகோதரிகள். இருவருமே கணவரை இழந்த நிலையில் மகன்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

தங்கம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மகன் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். சிகிச்சைக்குப் போதிய பணம் இல்லாததால் தாயாரிடம் ஏதேனும் பணம் உள்ளதா எனக் கேட்க, தான் சேமித்து வைத்திருப்பதாக தங்கம்மாள் கூறியுள்ளார்.

தங்கம்மாள் கொண்டு வந்து கொடுத்த பணத்தைப் பார்த்து அவரது மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில், அவை அனைத்தும் மோடியால் செல்லாதென அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ருபாய் நோட்டுகள் ஆகும். இந்தப் பணம் செல்லாது என அவரது மகன் கூறியதும் ரங்கம்மாள் அதிர்ந்து போயுள்ளார்.

அப்போது தனது அக்கா ரங்கம்மாளும் இதுபோன்று சேர்த்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். ரங்கம்மாளும் இந்தப்பணம் செல்லாது எனத் தெரிந்ததும் அதிர்ந்து போனார்.

தங்கம்மாள் 24,000 ரூபாயும், ரங்கம்மாள் 22,000 ரூபாயும் என மொத்தமாக 46,000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளனர். மூதாட்டிகள் இருவரும் யாருக்கும் தெரியாமல் பணத்தை சேமித்து வைத்ததாக அவர்களது மகன்கள் கூறியுள்ளனர்.

2015ம் ஆண்டு வரை தாங்கள் வேலைக்குச் சென்று வந்தபோது, சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணம் என்றும் இந்தப்பணம் செல்லாது என்ற விவரம் தங்களுக்கு தெரியாது எனவும், மகன்கள் மற்றும் பேரன்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். இதனால், அந்த மூதாட்டிகள் மட்டுமின்றி அந்த குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.