Tamilnadu
முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்!
முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என முரசொலி சார்பில் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் குற்றம்சாட்டின. இந்த சர்ச்சை குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தகுந்த பதிலடிகளைக் கொடுத்து, ஆதாரம் சமர்ப்பிக்கத் தயாரா என எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்தனர்.
பின்னர், பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி நிலம் குறித்துப் புகார் அளித்தார். பா.ஜ.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தி.மு.க அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், புகார் அளித்த பா.ஜ.க சீனிவாசனும், தலைமைச் செயலாளரும் வாய்தா வாங்கினர். பொய்ப் புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார் ஆர்.எஸ்.பாரதி.
இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.கவின் சீனிவாசன் ஆகியோருக்கு, முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், முரசொலி நிலம் தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு 48 மணிநேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!