Tamilnadu

மேலவளவு படுகொலை : 13 குற்றவாளிகளை அவசரமாக விடுவித்தது ஏன்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

கடந்த 1996ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினை சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து முருகேசன் உட்பட ஏழு பேரை, 1997ல் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 40 பேர் கைது செய்யப்பட்டு 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் ஏற்கனவே, அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தைக் காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார், அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, எனவே 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேரின் விடுதலை அரசாணையின் நகல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனு செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது,அப்போது உச்சநீதிமன்றம் விதித்த ஒரு தண்டனை காலத்தை, தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்து இருப்பது கண்டனத்துக்குரியது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

13 குற்றவாளிகளும் இவ்வாறு அவசரமாக விடுதலை செய்ய காரணம் என்ன? தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படையில் 13 பேரும் விடுதலையாகியுள்ளனர். அரசாணை கூட இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இவ்வளவு வேகமாக 13 பேரையும் விடுதலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? இவ்வளவு வேகமாக அவர்களை விடுதலை செய்ய அவர்கள் சமுகத்திற்கு அவ்வளவு முக்கியமானவர்களா என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், இவை சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும். இதேபோல் தர்மபுரியில் பேருந்து எரித்து மூன்று மாணவிகள் இறந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்க பட்டதற்கும் நீதிபகள் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை நாளை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.