Tamilnadu

ஏழை கர்ப்பிணிகளுக்கு வழங்கும் நிதியுதவியை கிடப்பில் போட்ட அ.தி.மு.க அரசு : கவலையில் கர்ப்பிணிப் பெண்கள்!

தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் பல ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் பேறுகாலத்தின்போது அவர்கள் இழக்கும் வருவாயை ஈடுசெய்யவும், சத்தான உணவுகளை உண்ண வழிவகை செய்யவும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

முன்னதாக, 5 ஆயிரமாக வழங்கப்பட்ட மகப்பேறு நிதியுதவி பலகட்ட போராட்டத்திற்கு பிறகு, தற்போது 18 ஆயிரமாக வழங்கப்படுகிறது. இந்த 18 ஆயிரம் ரூபாய் 3 தவனையாக வழங்கப்பட்டுவந்தது. குறிப்பாக, ஏழை கர்ப்பிணி பெண்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பம் செய்தவுடன் பட்டியல் பரிசீலனை பணி விறு விறுப்பாக நடைபெறும்.

ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் இந்த பணியில் தொய்வுகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன. குறிப்பாக கடந்த 6 மாத காலமாக இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு நிதியுதவி வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நிதி நெருக்கடியை காரணம் காட்டி கடந்த 3 மாதங்களாக உதவித் தொகையை முற்றிலுமாக நிறுத்திவைத்துள்ளது அ.தி.மு.க அரசு.

இதனால் தமிழகம் முழுவதும் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், 230.40 கோடி ரூபாய் நிதியுதவி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்கள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினால், அரசின் நிதி ஒதுக்கீடு வந்த பிறகே இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறுகிறார்கள். அரசிடன் நிதியுதவிக்குப் பணம் இல்லை என்றால், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் லாபத்தை என்ன செய்தார்கள்?

மேலும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து பாதிப்பில்லாமல் பிறக்கவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால் பேறுகாலத்தில் அவர்களுக்கு நிதியுதவி இல்லை என்றால், அவர்களால் எப்படி சத்தான உணவை உண்ணமுடியும். பிறக்கும் குழந்தையும் எப்படி ஆரோக்கியமானதாக பிறக்கும்? அரசு ஆடம்பரத்திற்காக செய்யும் செலவைத் தவிர்த்துவிட்டு, ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் திட்டத்திற்கு செலவு செய்யவேண்டும்”என அவர் தெவித்துள்ளார்.