Tamilnadu

”கட்சி கொடிக்கம்பம் நடக் கூடாதுன்னு நீதிமன்றம் சொல்லலியே” - கோவை விபத்துக்கு முதல்வரின் அலட்சிய பதில்!

கோவையில் அ.தி.மு.க கொடி கம்பம் சரிந்து விழுந்ததா ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வினரின் தொடர் விளம்பரத்தால் இதுபோல விபத்துக்கள் தொடர்கின்றன என இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை சிந்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா. இவர் நேற்றுக் காலை பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க. விளம்பரக் கொடிக்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அதேநேரத்தில் அங்கு ஒரு லாரியும் வந்துள்ளது.

கம்பம் விழுந்ததால் நிலைதடுமாறிய அனுராதா மீது, லாரி ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அனுராதாவின் இரு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க-வினரின் நிகழ்ச்சியில் பேனர் வைக்கப்பட்டதனால் தான் இளம்பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டதாகக் கூறி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, ”அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்ததால் நிகழ்ந்த விபத்து குறித்து இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. கட்சிக் கொடி கம்பம் நடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லையே.” என அலட்சியமாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமியின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உயர் நீதிமன்றம் சுபஸ்ரீ விவகாரத்தில் கடுமையாக சாடியது. தி.மு.க இனி பேனர் வைப்பதில்லை என்று கொள்கை முடிவெடுத்தது. இவ்வளவு நடந்து ஆளும் அ.தி.மு.க திருந்தியபாடில்லை என்று மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.